நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்; மருந்தாளுநர்கள் எண்ணிக்கை குறைவு… - NewsFast
NewsFast Logo

நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்; மருந்தாளுநர்கள் எண்ணிக்கை குறைவு…

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இவர்களுக்கு மருந்துகளை வழங்கும் மருந்தாளுனர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால மருந்தாளுனர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 250–க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதவிர மாவட்டத்தில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் 1,500 முதல் 2 ஆயிரம் பேர் வரை தினசரி வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாடு காரணமாக வெளி நோயாளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மருந்து, மாத்திரை வாங்கும் பகுதியில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனை தடுக்க கூடுதல் மருந்தாளுனர்களை நியமித்து, கூடுதல் செயலறைகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், “நாமக்கல் அரசு மருத்துவமனையில் தினசரி சுமார் 2 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ஆனால், மருந்து, மாத்திரைகள் வாங்க 4 செயலறைகள் மட்டுமே உள்ளன. இதில் 4 மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர்.

ஆனால், ஒருவர் விடுமுறையில் இருக்கும் நேரத்தில், 3 செயலறைகளில் மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதிலும் ஒருவர் பிரேத பரிசோதனைக்கு சென்று விட்டால், 2 செயலறைகளில் மட்டுமே மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. அதுபோன்ற நேரத்தில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதனை தடுக்க கூடுதலாக 6 மருந்தாளுனர் பதவி இடங்களை சுகாதாரத்துறை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உருவாக்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் கூடுதல் செயலறைகளைத் திறந்து தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்க முடியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

NewsFast Logo