ஜல்லிக்கட்டு – வலுக்கிறது போராட்டம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு….. - NewsFast
NewsFast Logo

ஜல்லிக்கட்டு – வலுக்கிறது போராட்டம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு…..

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர்

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டக்களமாக தமிழகம் மாறிப்போயுள்ளது.

திருச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாகச் சென்று ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஆண்டு கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டிய அவர்கள், பால் உற்பத்தியை நிறுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் சதிதான் இந்த ஜல்லிக்கட்டு மீதான தடை என்று குற்றம்சாட்டினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில், காளைகளுடன் சாலையில் திரண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் வர்த்தக சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் நடந்தது.

கோவை ரயில் நிலையம் முன்பாக திரண்ட இளைஞர் பெருமன்றத்தினர் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கருப்புக்கொடியை ஏந்தி பொதுமக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜல்லிக்கட்டை இந்தாண்டு நடத்த தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

தொடர்  போராட்டங்களால் தமிழகத்தில்  கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsFast Logo